Monday, January 3, 2011

நேருவின் "Glimpses of world History"

எனது நேற்றைய பதிவில் எனக்கு பிடித்த புத்தகங்களில் ஒன்றாக சவகர்லால் நேருவின் "Glimpses of world History" எனும் புத்தகத்தையும் சொல்லி இருந்தேன். உண்மையில் சொல்ல வேண்டுமானால் என்னை முதன் முதலில் ஆச்சர்ய படுத்திய புத்தகம் என்றால் அது இந்த புத்தகம் தான். அதை படித்து முடித்த உடன் எனக்குள் தோன்றிய எண்ணம் நமக்கு ஏன் நம் பெற்றோர் இப்படி தங்களுக்கு தெரிந்த விஷயங்களை கடிதம் எழுதவில்லை என்பது தான்.

நேரு தனது பெண் இந்திரா காந்திக்கு, சிறையில் இருந்து எழுதிய கடிதங்களின் தொகுப்பு தான் அந்த புத்தகம். கடிதங்கள் என்றால் நாம் இன்று அனுப்பும் கடிதங்களோ மினஞ்சல்களோ இல்லை. உலகத்தின் வரலாற்றை கடிதங்களாக எழுதியிருக்கிறார். உலகத்தின் வரலாறு என்றால், மனிதன் எப்படி நாகரிகத்தை தோற்றுவித்தான் என்பதில் தொடங்கி அவரின் கால கட்டம் வரை எழுதியிருக்கிறார்.

சொல்லும் விதமும் அருமை. எங்கிருந்து தொடங்குவது, எந்த நாட்டினை முதலில் சொல்வது, எந்த சம்பவத்தை முதலில் சொல்வது என்ற குழப்பம் இல்லாமல், ஒரு நூறு வருடங்களை எடுத்து கொண்டு, அந்த நூறு வருடங்களில் ஒவ்வொரு நாட்டிலும் நடந்தது, அதனால் பக்கத்து நாடுகளில், கண்டங்களில், ஏற்பட்ட பாதிப்புகள், அதனால் உருவான வரலாறு என தெளிவாக செல்லும் ஒரு கதை போல் இருக்கும். அந்த புத்தகத்தினை படித்தது முதல் இன்று வரை வரலாற்று சம்பவங்கள் பற்றி கேள்விப்பட்டால் என் மனது உடனே நினைப்பது இது எதனால் ஏற்பட்டிருக்கும் இதன் பாதிப்புகள் பக்கத்து நாடுகளில் எப்படி இருந்திருக்கும் என்று தான். நேரு தன புத்தகத்தில் இந்த கதை சொல்லும் போக்கிற்கும் ஒரு காரணம் சொல்கிறார். எந்த நாட்டின் வரலாறும் பக்கத்து நாடுகளை சாராமல் இருக்காது என்கிறார். இன்றும் அது எவ்வளவு உண்மை. நமது அண்டை நாடுகளுடன் நமது உறவுகள் பாதிப்படையும் போது நமது பொருளாதாரம் எவ்வளவு பாதிப்படைகிறது. அதனால் நமது சமுகத்தில் ஏற்படும் மாற்றம் எல்லாவற்றையும் எடுத்து கொள்ளும் போது அவர் சொன்னது எவ்வளவு உண்மை.

அந்த புத்தகத்தினை படித்த பின்பு நான் எடுத்து கொண்ட உறுதிமொழி எனது குழந்தைகளுக்கும் நான் கடிதம் எழுத வேண்டும் என்பது தான். அனால் எனது குழந்தைகளுக்கு கடிதங்களை படிக்கும் அளவுக்கு பொறுமை இருக்குமா என்பது தான் தெரியவில்லை. பொறுத்திருந்து பார்க்க வேண்டியது தான்.

2 comments:

Ramesh said...

நன்றி பகிர்வுக்கு. வாங்கிப்படிக்க முயல்கிறேன். * உங்க பின்னூட்டப்பெட்டியில் வேர்ட் வேறிபிக்கேஷனை நீக்குதல் நல்லது கருத்துத் தெரிவிக்க இலகு.நண்பரே

Unknown said...

நல்ல பதிவு.வாழ்த்துக்கள்