Wednesday, January 19, 2011

காடு பார்க்க வாருங்கள்

உங்களுக்கு காடு பார்க்க வேண்டுமா, நான் கூறும் மூவரை உங்கள் உடன் சேர்த்து கொள்ளுங்கள். அந்த மூவர் குட்டப்பன்,கிரிதரன் நாயர், மற்றும் அய்யர். இவர்களுடன் நீங்கள் காடு பார்க்க கிளம்பினால், கட்டாயம் காட்டை விட்டு வெளி வரமாடீர்கள். எனக்கும் ஜெயமோகனின் காடு நாவலை படித்த பின்பு இந்த எண்ணம் தான் தோன்றியது. இவர்களுடன் காடு பார்க்க கிளம்ப வேண்டும். அனால் இவர்களை அந்த நாவலில் அன்றி இந்த உலகில் எப்படி கண்டுபிடிப்பது என்பது தான் தெரியவில்லை.

ஜெயமோகனின் காடு நாவல், நமக்கு இந்த கதாபாத்திரங்களின் வழியாகவே காட்டை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. அதிலும் கிரிதரனின் கண்களின் மூலமாக. தனது மாமனின் காண்ட்ராக்ட் வேலைகளுக்காக காட்டுக்குள் வரும் கிரியை, அந்த காடு எப்படி தன் வயமக்குகிறது என்பதை படித்து அறிதலே சுவாரசியம்.குட்டப்பன் முதலில் முக்கியமான ஒரு கதாபாத்திரமாகவே தெரிவதில்லை, ஆனால் காட்டினை பற்றிய அவனது அறிவும், காட்டின் ஒரு அங்கமாகவே அவன் வாழ்வதும், நாம் காடு சென்றால் அவனை துணைக்கு அழைத்து செல்லவேண்டும் எனும் என்னத்தை வழுப்படுத்துகிறது. முக்கியமாக சென்நாயினை பற்றிய விவரங்கள். சென்நாயினை மிருக காட்சி சாலைகளில் பார்த்திருக்கிறேன். மிகவும் குட்டியான ஒரு மிருகமாக தான் தெரியும். அனால் குட்டப்பன் கூறுவதை கேட்டால் தான் நமக்கு உண்மை புரியும். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது எனும் மொழி இங்கு உண்மை. அந்த நொடிக்கு பிறகு தான் நான் குட்டப்பனை முக்கியமான கூட்டாளியாக சேர்த்து கொண்டேன்.

அதே போல் காட்டின் அழகை நீங்கள் ரசிக்க வேண்டுமானால், அதுவும் இலக்கிய பாடல்களுடன் என்றால் கட்டாயம் அய்யர் வேண்டும்.ஆனால் மனிதர் பெண்களை பார்த்தால் உன்மத்தம் ஏறியவர் போல் வர்ணிக்க ஆரம்பித்து விடுவார் கவனம். இப்படி பட்ட மனிதர்கள் சும்மா இருக்கும் சமயங்களில் இலக்கியம் பேசினால் போரடிக்க தான் செய்யும், அனால் காட்டினுள் இலக்கிய விவரணையுடன் ஒரு சுற்று பயணம் என்றால் கட்டாயம் சுவாரசியம் தான்.

ஜெயமோகனின் நாவல்களுள் நான் இரண்டை மற்றுமே இது வரை படித்துள்ளேன். விஷ்ணுபுரம் ஒன்று, காடு அடுத்தது. இரண்டிலுமே என்னை கவர்ந்தது காடு தான். அதற்கு காரணம் நான் மேலே சொன்ன கதாபாத்திரங்கள் தான். இன்னும் எத்தனையோ கதாபாத்திரங்கள் இருந்தாலும் கூட அவை எதுவும் என்னை வசீகரிக்கவில்லை. ஜெயமோகனின் எழுத்து வன்மையும் இதில் தான் உணர முடிந்தது. ஒரு சீராக செல்லும் கதை எப்போது முன்பின்னாக மாறியது என உணர முடியவில்லை அதேபோல் அதிகமான தத்துவ விசாரங்களும் இல்லை. தத்துவங்கள் அய்யர் மூலமாகவும், குட்டப்பன் மூலமாகவும், கதையோடு, நிகழ்வாக வெளிப்படுகிறது. இதுவே இந்த நாவலை எளிமைபடுத்துகிறது. காடு பார்க்க வாய்ப்பு கிடைத்தால், இந்த நாவலை வாசித்து செல்லுங்கள் காட்டின் அனுபவம் கட்டாயம் வித்தியாசமாக் இருக்கும்.

1 comment:

ராம்ஜி_யாஹூ said...

பகிர்ந்தமைக்கு நன்றிகள்