Monday, June 13, 2011

கல்வி = அறிவு; கல்வி != வேலை

கடந்த சில நாட்களாக சமச்சீர் கல்வி பற்றி நடந்து வரும் விவாதங்களை கவனித்து வந்த போது, நான் கல்வியை பற்றி வைத்திருக்கும் சில கருத்துக்களை பகிர்ந்துகொள்ள எண்ணியே இந்த பதிவு.

நான் பட்ட படிப்பை முடித்து ஒரு கல்லூரியில் வேலை செய்ய ஆரம்பித்ததில் இருந்ததே சில முரண்பாடுகளை கவனித்து வந்துள்ளேன், அது தான் இந்த பதிவின் தலைப்பு. இதற்கு நானும் விதிவிலக்கல்ல. படிக்கும் மாணவர்கள் அனைவருக்குமே கல்வி என்பது வேலை வாங்குவதற்கு ஒரு கருவி அல்லது ஒரு வழி. யாருமே கல்வியினை அறிவை வளர்த்துக் கொள்ள ஒரு வழியாக தேர்ந்தெடுப்பது இல்லை. மாணவர்களிடமும், பள்ளி கல்வி முடித்து கல்லூரியில் சேரும் நிலையில் உள்ள மாணவர்களின் பெற்றோரிடமும் சாதரணமாக நான் எதிர்கொள்ளும் கேள்விகள்.

1. எத்தனை மார்க் எடுத்தால் மென்பொருள் நிறுவனங்களில் வேலை கிடைக்கும்?

2. எந்த மென்பொருளை கற்றுக்கொண்டால் எளிதாக வேலை கிடைக்கும்?

3. எந்த கல்லூரியில் படித்தால் எளிதாக வேலையில் சேரலாம்?

4. எந்த பாடப்பிரிவிற்கு வேலைகள் அதிகமாக உள்ளன?

நான் மேற்கண்ட கேள்விகள் அபத்தமானவை என்றோ அல்லது தேவையற்றது என்றோ எண்ணவில்லை என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும். கட்டாயம் மிகசிறந்த நிறுவனத்தில் வேலை செய்வதும் , கை நிறைய சம்பாதிப்பதும் நாம் நினைத்த மாதிரி வாழ தேவை தான். ஆனால் கல்வி கற்கும் பருவத்தில் கல்வியினை நம் அறிவை வளர்த்துக்கொள்ள என எண்ணாமல் வேலை வாங்குவதற்கு என எண்ணுவதே மேற்கண்ட கேள்விகள் எழ காரணம். முன் காலங்களில் கல்வி, அறிவை வளர்க்க என்றே பொருள்பட்டது. ஆனால் இப்போது அப்படி இல்லை.

இதனை சரிசெய்ய நாம் கல்வி கற்பிக்கப்படும் முறை , மற்றும் மாணவர்களின் அறிவை சோதிக்கும் முறை ஆகியவற்றையே மற்ற வேண்டும் என்பது எனது எண்ணம். இவற்றை மாற்றாமல் நாம் பாடத்திட்டத்தை மாற்றுவதில் எந்த பயனும் இல்லை. ஏனெனில் பாடத்திட்டம் மாறினாலும் கல்வி கற்கும் முறை மாறவில்லை.

கல்வி கற்பிக்கும் முறை பற்றி முதலில் எடுத்துக் கொள்வோம். இன்று பள்ளிகளிலும், கல்லூரியிலும் கல்வி கற்பிக்க படுவதில்லை, ஒப்பிக்கப்படுகிறது. ஆசிரியர் பாடப்புத்தகத்தில் இருந்து தான் மனப்பாடம் செய்தவற்றை அப்படியே வகுப்பில் ஒப்பிக்கிறார். மாணவன் வீட்டில் வந்து அதனை மனப்பாடம் செய்கிறான். இதன் மூலம் அவன் படித்திருப்பான் ஆனால் புரிந்திருக்க மாட்டான். இதற்கு விதிவிலக்காக இருக்கும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.

இரண்டாவதாக மாணவனின் அறிவினை சோதிக்கும் முறை. ஒரு மாணவன் சில கேள்விகளை படித்து விட்டு தேர்வுக்கு செல்கிறான். அன்று அந்த கேள்விகள் வினாத்தாளில் இருந்தால் அவன் அதிக மதிப்பெண்களை பெற்றுவிடுவான். அதற்கு நேர்மாறாக இருந்தால் குறைந்த மதிப்பெண்கள் பெறுவான் அல்லது தேர்வில் தோல்வி அடைவான். ஆக அவனது அதிர்ஷடம் அன்று எப்படி இருந்தது என்பதினை பொறுத்தே அவனது தகுதி சோதிக்கபடுகிறது. மென்பொருள் நிறுவனங்கள் ஒரு மாணவனின் கல்லூரி மதிப்பெண்களை வைத்து மட்டுமே யாரையும் வேலைக்கு எடுப்பது இல்லை , மாறாக தனியாக தேர்வுகள் நடத்தி அதன் மூலமே தேர்ந்தெடுக்கின்றனர். அதே போல் சில வருடங்களாகவே நாட்டின் பட்டதாரிகளில் இருபத்தி ஐந்து சதவிகிதத்தினர் மட்டுமே வேலைக்கு தகுதியனவர்களாக இருக்கிறார்கள் எனும் கூற்றினை செய்திதாள்களில் படித்திருக்கலாம். இவை இரண்டும் நம் தேர்வு முறைகளின் தோல்வியை மட்டுமே தெரிவிக்கின்றன.

இதை போலவே இன்னும் நிறைய காரணிகள் இருக்கின்றன. அவற்றை மாற்றாமல் பாடதிட்டத்தினை மற்றும் மாற்றுவதால் எந்த பயனும் இல்லை என்பதுவே எனது எண்ணம்.