Wednesday, November 30, 2011

கேள்விக்குள்ளாகும் மக்களாட்சி: பிரதிநிதிகள் சபையில் மக்களின் பங்கு


நமது நாடு உலகின் மிகப்பெரிய மக்களாட்சி என அழைக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் நாம் ஒரு மக்களாட்சியில் இருப்பதாக உணர்கிறோமா எனும் கேள்வி பல தடவை எழுந்தது உண்டு. லோக்பால் மசோதா பிரச்சினைகளின் போது அடிக்கடி நான் கேட்ட ஒரு சொற்றொடர் " மக்கள் பிரதிநிதிகளை தவிர வேறு யாரும் என்ன சட்டம் வேண்டும் என வலியுறுத்த முடியாது" என்பது. அதன் தொடர்ச்சியாக எனக்குள் எழுந்த எண்ணங்களின் பதிவு இது.


ஒரு மக்களாட்சி என்பது மக்களுக்காக, மக்களால், மக்களை கொண்டு நடத்தப்படும் ஒரு ஆட்சி என்பது அனைவரும் கூறும் விளக்கம். இப்போது இங்கு தான் சில பிரச்சனைகள் வருகின்றன. நமது மக்களாட்சி பொது மக்களை அங்கமாக கொள்ளாமல், பிரதிநித்துவ முறையில் அமைந்தது. அதாவது, ஒரு பகுதியில் இருக்கும் மக்களின் பிரதிநிதியாக ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் அந்த மக்களின் சார்பாக எல்லா முடிவுகளையும் எடுக்கிறார்.


முதலாவது பிரச்சனை தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதி சார்ந்தது. அந்த பிரதிநிதியை அந்த குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் அணைத்து மக்களும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கவில்லை. மாறாக அதிகமான மக்கள் ஓட்டளித்த ஒருவர் தேர்ந்தேடுக்கபடுகிறார். இவர் எப்படி தனக்கு எதிராக ஓட்டளித்த மக்களின் பிரதிநிதியாக செயல்பட முடியும். இந்த தேர்வு சரி என்று வாதாடினால் எதிராக வாக்களித்த மக்களும் அவர்கள் எண்ணங்களும் கணக்கில் இல்லாமல் போய்விடும். 


இரண்டாவது, எந்த ஒரு பிரதிநிதியும் தனக்கு என்று தனி கொள்கைகள் கொள்வது இல்லை. ஒரு கட்சியின் கொள்கைகளே அவர்களின் கொள்கைகள். தனியராக நிற்கும் ஒருவர் தன் கொள்கைகள் இன்னவை என மக்களுக்கு உணர்த்துவது கடினம். அதே போல் தேர்தலின் போது இருக்கும் பிரச்சினைகளுக்கு மட்டுமே கொள்கைகள் உருவாக்க படுகின்றன. அதற்க்கு மட்டுமே மக்கள் தங்கள் பிரதிநிதியாக யாரை தேர்ந்தெடுக்கலாம் என முடிவு செய்ய முடிகிறது. இடையில் ஒரு பிரச்சினை வரும் போது மக்களின் உணர்வுகள் எப்படி இருந்தாலும் கட்சிகள் என்ன நிலை எடுக்கின்றனவோ அதுவே மக்களின் பிரதிநிதுவமாக பதியப்படுகிறது. 


மூன்றாவது, ஏதேனும் ஒரு சமயம் மக்கள் தங்களின் கருத்துக்களை வெளிபடுத்த வேண்டும் என்றால் அதற்க்கு நேரிடையான ஒரு வழியும் கிடையாது. ஊடகங்களும், கட்சிகளின் எண்ணங்களும், செல்வாக்கு மிகுந்த வியாபாரிகளின் கருத்துக்களுமே போது மக்களின் கருத்துக்களாக பதியப்படுகின்றன. 


இப்படி இருக்க நாம் எப்படி ஒரு மக்களாட்சி நடக்கும் நாட்டில் இருக்கிறோம் என்று கூற முடியும். நம்மை ஆட்சி செய்பவர்கள் தவறு செய்தாலும் அவர்களாகவே தங்களை தண்டித்து கொள்ள வேண்டும் என்று ஏமாந்து காத்திருக்கிறோம். அல்லது அவர்களின் எதிர்கருத்து கொண்டவர்கள் ஆட்சிக்கு வந்து அவர்களை வதைத்து அவர்கள் கொண்டுவந்த திட்டங்கள் நல்லவையா கெட்டவையா என ஆராயாமல் எதிர் அணியினரின் திட்டம் என்பதற்காகவே மாற்றி அமைப்பதை வாய் பொத்தி பார்த்திருக்கிறோம்.
இதற்கு எனக்கு தோன்றிய ஒரு முக்கியமான தீர்வு, முக்கியமான சட்டங்கள் நிறைவேற்றப்படும் போது மக்களை அந்த சட்ட வடிவமைப்பில் நேரடி பங்கு கொள்ளவைப்பது, மற்றும் அந்த சட்டங்கள் வேண்டுமா வேண்டாமா எனும் முடிவை மக்களிடம் இருந்து நேரடியாக பெறுவது ஆகும். இந்த முறை சுவிச்சர்லாந்து நாட்டில் நடைமுறையில் இருக்கிறது என்று எங்கோ கேள்விப்பட்டதாக ஞாபகம்.இதிலும் பல பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் மாற்றங்களை செயல்படுத்தி பரிசோதிக்கும் போது பல பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வு கிடைக்கும்.