Tuesday, January 4, 2011

உப பாண்டவம்

எஸ்.ராமகிருஷ்ணனின் முக்கியமான நூல்களில் ஒன்று உப பாண்டவம். இந்த நூலுக்காக இரண்டு ஆண்டுகள் தேடி அலைந்து தான் வாங்க முடிந்தது. ஏனெனில் பழைய பதிப்பு விற்று விட்டதால், நூல் எங்கும் கிடைக்கவில்லை. இந்த நூலுக்கான அறிமுகம் எனக்கு எஸ்.ராமகிருஷ்ணனின் துணையெழுத்து எனும் கட்டுரை தொகுதியில் இருந்து கிடைத்தது. ஆனந்த விகடனில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. இப்போது ஆனந்த விகடன் பதிப்பகத்தின் மூலம் நூலாகவும் கிடைக்கிறது. கேள்விப்பட்டது முதல் புத்தக கடைகளுக்கு செல்லும் போது எல்லாம் இந்த நூலை பற்றி விசாரிப்பேன். இறுதியில் ஒருநாள் கிடைக்கவும் செய்தது,எனது மனதை கொள்ளையடிக்கவும் செய்தது.

மகாபாரதத்தை எல்லோரும் பாண்டவர்களுக்கும் - கௌரவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட சரித்திரமாக தான் தெரிந்து வைத்திருப்போம். ஆனால் இந்த முக்கியமான கதாபாத்திரங்களுக்கு, அருகிலேயே இருக்கும் துணை கதாபாத்திரங்கள் பற்றி கவனம் கொள்ளும் நூல் தான் உப பாண்டவம். நமக்கு தெரிந்த அதே கதை தான், அதே கதாபாத்திரங்கள் தான், அதே சம்பவங்கள் தான், ஆனால் கதையின் மையம் மட்டும் வேறு.

கௌரவர்கள் 100 பேர் என்று தான் படித்திருப்போம். ஆனால் அவர்களுடன் பிறந்த துச்சலை எனும் பெண் ஒருத்தி இருந்தால் என்றோ, அவளது கணவன் தான் அபிமன்யுவை கொன்றதற்காக, அர்சுனனால் கொல்லப்பட்ட செயத்ரதன் என்றும் நம்மில் அதிகம் பேருக்கு தெரிந்திருக்காது. அதே போல் கௌரவர்களுக்கு 101 வது சகோதரனாக அவர்களது தந்தைக்கும், ஒரு சேடி பெண்ணிற்கும் பிறந்த யுயுத்சு உண்டு என்பதும் எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் என தெரியவில்லை. அதே போல் பிதாமகர் அம்பு படுக்கையில் வீழ்வதற்கு காரணமான சிகண்டிக்கு ஒரு மனைவி இருந்தது பற்றி எத்தனை பேருக்கு தெரியும். அதே மாதிரி பாண்டவர்களுக்கு புது மாளிகை கட்டி கொடுத்து மகாபாரத போர் ஏற்பட வழி ஏற்படுத்தி கொடுத்த மயனின் பூர்விகம், பாண்டவர்கள் மற்றும் குந்திக்கு பதிலாக அரக்கு மாளிகையில் எரிக்கப்பட்ட வேட்டுவ பெண்,அவள் கணவன், இன்னும் எத்தனையோ கதாபாத்திரங்களை இந்த புத்தகம் எனக்கு அறிமுகபடுத்தி இருந்தது.

வர்ணிக்க இவ்வளவு எளிதாக இருந்தாலும் கூட சற்றே யோசிப்போமானால் இவ்வளவு தகவல்களை திரட்ட எவ்வளவு கஷ்டங்களை எதிர் கொள்ள வேண்டி வரும்.இந்த புத்தகத்தை படித்து முடிக்கும் வரை எனக்கென்று ஆதர்ச எழுத்தாளர் என்று யாரும் இருக்கவில்லை. இந்த புத்தகத்தை முடித்த பிறகு அந்த நிலை மாறித்தான் போனது.

No comments: