Saturday, January 1, 2011

புது வருட உறுதிமொழிகள்

புது வருடம் பிறக்கும் போதே ஒவ்வொருவரும் பல விதமான உறுதிமொழிகள் எடுப்போம். சில போன தடவை எடுத்து நிறைவேறாமல் போனதாக இருக்கலாம். சில எடுத்த உறுதிமொழி மறந்து போய் இந்த வருடம் நினைவுக்கு வந்ததாய் இருக்கலாம். பல வருடங்கள் நான் உறுதிமொழிக்காக அதிகம் மெனக்கெட்டது இல்லை. அனால் இந்த வருடம் ஏனோ நிறைய விசயங்கள் மனதில் வந்து அமர்ந்து கொண்டு பாடாய் படுத்தின.

அப்படி ஒரு விஷயம் தான் இந்த பதிவும் கூட.2008ம் வருடமே எனது முதல் பதிவை எழுதி இருந்தாலும் கூட, அடுத்த பதிவு பற்றி அதிகமாக யோசிக்கவில்லை. படிக்க படிக்க எழுதும் ஆர்வம் வரும் என்பது தினமும் படிக்கும் வழக்கம் உள்ள எல்லோருக்கும் தெரிந்து தான் இருக்கும். அதுபோலவே சமீப காலங்களில் தொடர்ந்து பதிவுகளை வசித்து வருவதால் எனக்கும் கூட பதிவு எழுதும் பழக்கத்தை இந்த வருடத்தில் இருந்து தொடங்க வேண்டும் என தோன்றியது. ஆரம்பித்தும் விட்டேன். முதல் பதிவாக இந்த புத்தாண்டு உறுதிமொழிகளையே எழுதவும் முடிவு செய்தேன்.

இது மட்டும் அல்ல எனது புத்தாண்டு உறுதிமொழி. முதல் தடவையாக உறுதிமொழி எடுப்பதால், ஒன்றோடு விடாமல் பல உறுதிமொழிகளை எடுத்தேன். பல வருடங்களாக விட்டு போய் இருந்த டைரி எழுதும் பழக்கத்தை தொடர வேண்டும் என்பது அடுத்த உறுதிமொழி. நான் +1 படுக்கும் போது தொடங்கிய பழக்கம் இது. பல வருடங்களாக தொடர்ந்து எழுதி வந்தேன். சில நண்பர்களுக்கும் கூட இந்த பழக்கத்தை பரிந்துரை செய்தேன். அவர்கள் இடையில் நிறுத்திய போதும் கூட நான் தொடர்ந்து எழுதி வந்தேன். இடையில் எங்கிருந்தோ சோம்பேறி எனும் நோய் என்னை தொற்றிக்கொள்ள அனைத்தும் விடப்பட்டது. ஆனால் அந்த நிலைமையிலும் நான் செய்த ஒரே ஒரு நல்ல காரியம் தொடர்ந்து டைரி வாங்கியது மட்டும் தான். இதனால் முற்றிலுமாக நிற்பதற்கு பதிலாக வருடத்திற்கு 10 நாட்கள் என்ற நிலையிலாவது எனது டைரி எழுதும் பழக்கம் தொடர்ந்தது. ஒரு வாரம் முன்பு திடிரென டைரி எடுத்து படிக்க பழைய நினைவுகள் உற்சாகம் தந்தன. நான் எழுதாமல் இழந்த நாட்கள் யோசிக்க வைத்தன. ஒருவழியாக அதுவும் எனது புத்தாண்டு உறுதிமொழியில் சேர்ந்து கொண்டது.

எனது முதல் எழுத்து பழக்கமே நான் அதே +1 படிக்கும் போது எழுதிய ஒரு கதை மூலம் தான். அப்போது குமாரராஜா எனும் பாதிரியார் எனக்கு ஆங்கிலம் எடுத்தார். அவர் எப்போதுமே பாடத்தை தவிர படம் சம்மந்தப்பட்ட பல விசயங்களை சொல்லி தருவது வழக்கம். அப்படி ஒருநாள் அவர் நடத்திய கதை எழுதுவது எப்படி என்பதன் பதிப்பு தான் எனது முதல் கதை. அதன் பிறகு இரண்டு மூன்று கதைகள் எழுதினாலும் கூட, என் பயத்தினாலும், ஒரு ஜோசியனாலும் என் எழுத்து பழக்கம் நின்று போனது. அதையும் தொடர்வது என்பது ஒரு முடிவு. இந்த பதிவுகளும் எழுத்து தான் என்றாலும், இதோடு நிறுத்திக்கொள்வதா அல்லது கதைகளிலும் முயற்சி செய்வதா என இன்னும் முடிவு எடுக்கவில்லை. முதலில் எழுதுவோம் அப்புறம் மற்றவை என முடுவு செய்தேன்.

நான் ஆசிரியர் வேலை பார்ப்பதால், வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களை பற்றி தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். அந்த பழக்கத்தையும் கடந்த சில வருடங்களாக விட்டு விட்டேன் அதையும் தொடர வேண்டும் என்பது முடிவு. பார்க்கலாம் இந்த வருடம் உறுதிமொழிகளை எப்படி கடைபிடிக்கிறேன் என்று..

1 comment:

Philosophy Prabhakaran said...

ஒரு வாரமா பதிவையே காணோம்... புத்தாண்டு உறுதிமொழி என்ன ஆச்சு சார்...?