Tuesday, January 11, 2011

ஆழி சூழ் உலகு: ஜோ டி குருஸ்

நெய்தல் நிலத்திற்கு என்று ஒரு வித்தியாசம் உண்டு. மற்ற நான்கு நிலத்திலும் நிலம் என்பது முக்கியம். நிலத்தின் வேறுபாடுகள் மட்டுமே அவற்றை பிரிக்கின்றன.ஆனால் நெய்தல் நிலத்தின் தன்மை வேறுமாதிரியானது. அங்கு நிலம் அல்ல முதன்மை பெறுவது, கடல். இப்படிப்பட்ட நெய்தல் நிலத்தின் மக்களாகிய பரதவர்களின் வாழ்கை பற்றிய ஒரு படைப்பு தான், ஆழி சூழ் உலகு.

மீனவர்களின் வாழ்கை மீனவர்களின் சொல்வழக்குகளின் மூலமே வெளிப்படுத்த படுவது இந்த நூலின் மிக முக்கிய பலம். சில பக்கங்கள் படித்து முடிக்கும் வரை நமக்கு பழக்கப்படாமல் இருக்கும் மொழியும் பொருள்களும், நாம் எந்த அளவுக்கு பரதவர்களிடம் இருந்து விலகி இருக்கிறோம் என தெளிவு படுத்துகிறது. நூலினுள் மூழ்க மூழ்க நாமும் அதன் ஒரு பகுதி ஆகி விடுவது ஆச்சர்யம்.

தொம்மந்திரையார்,கோத்ரா,ஜஸ்டின்,வசந்தா,சூசை,சிலுவை இன்னும் சில கதாபாத்திரங்களும், அவர்களின் வாழ்க்கையுமே கதை. அவர்களுக்குள் இருக்கும் உறவும்,பகையும் ஆச்சர்ய படுத்துகின்றன. அந்த மக்கள் எப்படி அருகில் இருக்கும் மற்ற மக்களால் புறக்கணிக்க படுகிறார்கள், அந்த ஊருக்கே வரும் அரசு ஊழியர்களும் இறை பிரதிநிதியும் அவர்களை எந்த அளவிற்கு பயன்படுத்தி கொள்கிறார்கள் என்பதும் முகத்தில் அறையும் உண்மைகள்.

இந்த கதை நடக்கும் வருடங்களில் நடந்த முக்கியமான சம்பவங்கள் கதாபாதிரன்கிளின் உரையாடலின் மூலமாக, அவர்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக, வெளிப்படுவது மிகவும் அருமை. ஆகவே இது ஒரு வகையில் வரலாற்று நூல் எனவும் கொள்ளலாம். சாமான்ய மக்களின் வாழ்க்கையினை சொல்லும் ஒரு வரலாற்று நூல். நான் இந்த புத்தகத்தினை மிகவும் ரசிக்க காரணம் எனது ஊரும் இந்த நூலின் ஒரு பகுதியாக வருவதே. முக்கியமான கதாபாத்திரங்கள் அனைத்தும் தூத்துக்குடி வருவதும், அவர்களின் வாழ்வில் தூத்துக்குடி ஒரு அங்கமாக இருப்பதும், குறிப்படப்படும் சில கட்டடங்கள் இன்னும் இருக்கின்றனவா என என்னை யோசிக்க வைத்தன. இன்னாசியர் புறத்தில் இருக்கும் ஒரு இளம் துறவிகள் மடத்தினை என்னால் அடையாளம் காண முடிந்ததது, ஏனெனில் நான் அதற்கு அருகில் இருக்கும் ஒரு பள்ளியில் தான் படித்தேன். ஆனால், பாண்டிபதி அரண்மனை என குறிப்பிடப்படும் கட்டடம் எங்கு இருந்த்தது என உணர முடியவில்லை.

ஒரு புதிய உலகினை திறந்து காட்டுவதன் மூலம் இந்த நூல் என்னை வசிகரிக்கவே செய்கிறது. இந்த நூலின் ஆசிரியர் எழுதிய "கொற்கை" எனும் நூலை வாங்க முடிவு செய்து விசாரித்த வண்ணம் உள்ளேன்.

No comments: