Sunday, January 2, 2011

என் வாழ்வில் புத்தகங்கள்

புத்தக திருவிழா நேரமாதலால் புத்தங்கள் பற்றி எழுதலாம் என நினைத்து இந்த பதிவு. எனக்கு நினைவு தெரிந்த வரை நான் விரும்பி படித்த முதல் புத்தகம் தினமலருடன் வரும் சிறுவர்மலர் தான். அதன் பிறகு மெல்ல எனது அக்கா ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் படித்ததால் அவள் மூலம் ஆங்கில நாவல்கள் படிக்க கிடைத்தன. அப்பப்போ வீட்டில் போராடி, கெஞ்சி கூத்தாடி வாங்கிய ராணி காமிக்ஸ் போன்ற புத்தகங்களும் நான் முதன் முதல் படித்த புத்தகங்களுள் அடங்கும். ஆனால் என்றுமே புத்தகங்களின் பால் ஒரு ஈடுபாடு இருந்தே வந்துள்ளது.

எனது உண்மையான வாசிப்பு அனுபவங்கள் தொடங்கியது கல்லூரியில் தான். நான் பள்ளிக்காலங்களில் படித்த மேற்சொன்ன புத்தகங்களின் மூலமாகவே கல்கி பற்றி தெரிந்து வைத்திருந்தேன். கல்லூரியில் உடன் படித்த மாணவி ஒருத்தியின் மூலம் சிவகாமியின் சபதம் அறிமுகம் ஆனது. அதன் பிறகு வீட்டில் செலவுக்கு தந்த பைசாவில் மிச்சம் செய்து புத்தகங்கள் வாங்கி, நண்பர்களிடத்தில் வாங்கி என்று சில கல்கியின் நாவல்களும், சாண்டில்யன் நாவல்களும் படித்து முடித்தேன். சென்னையில் வந்து படித்ததால் செலவுக்கு மாசமாசம் பணம் கிடைத்தது வசதியாக இருந்தது. அப்படி பட்ட ஒரு சமயத்தில் தான் சென்னையில் புத்தக கண்காட்சி நடப்பதாக தெரிய வந்தது. 2002 ம் வருடம் என நினைக்கிறேன், அப்போது புத்தக கண்காட்சி காய்தேமில்லத் கல்லூரியில் நடந்தது. அங்கு தான் எனக்கு பெரியார் அறிமுகம் ஆனார். அவரை பற்றி கேள்விப்படிருந்தேனே ஒழிய அவரை படிக்க தேடியது கூட இல்லை. ஆனால் அந்த புத்தக கண்காட்சியில் யாருமே இல்லாமல் வெறிச்சோடிய நிலையில் இருந்த கடையை பார்த்தவுடன் அப்படி என்ன தான் இருக்கிறது அவரின் எழுத்தில் என எனக்குள் ஒரு குறுகுறுப்பு. அந்த நாள் கட்டாயம் என் வாழ்கையை சரியான பாதையில் செலுத்த நான் முனைந்த முதல் நாள். அதன் பிறகு எந்த ஒரு புத்தக திருவிழாவிலும்( மூன்றுக்கு தான் சென்றுள்ளேன்) சுயமரியாதை பதிப்பக கடையை பார்க்காமல் வந்தது இல்லை.

அந்த சமயத்தில் எனக்கு பெரிதாக இலக்கிய ஆர்வம் இருந்தது இல்லை. ஆனால் பிறகு வேறு ஒரு நண்பரின் மூலம் அனந்த விகடனும், அதன் மூலம் பல இலக்கிய நூல்களும் எழுத்தாளர்களும் அறிமுகமாயினர். அதன் பிறகு நான் சென்ற புத்தக கண்காட்சிகளில் நூல்களை தேடி தெரிவு செய்து வாங்கியிருக்கிறேன். அதே போல் வேலைக்கு செல்ல ஆரம்பித்த பின்னும் அதற்கு சற்று முன்னும், சென்னையில் லேண்ட்மார்க் மாற்றும் கிக்கின் போதம்ஸ் புத்தக கடைகளில் சென்று புத்தகங்கள் வாங்குவது வழக்கமாக ஆனது.

நான் இதுவரை படித்த புத்தகங்களுள் எனக்கு மிகவும் பிடித்த, என்னை பாதித்த புத்தகங்களில் சில
  1. பொன்னியன் செல்வன் - கல்கி
  2. glimpses of world history - நேரு
  3. கடல் புறா- சாண்டில்யன்
  4. துணையெழுத்து - எஸ். ராமகிருஷ்ணன்
  5. உப பாண்டவம் - எஸ். ராமகிருஷ்ணன்
  6. தண்ணீர் தேசம் - வைரமுத்து
  7. என் பெயர் ராமசேசன்- ஆதவன்
மேலே குறிப்பிடப்படிருப்பது கட்டாயமாக தர வரிசை இல்லை.

இந்த புத்தக கண்காட்சிக்கும் வர வேண்டும் என்பது எனது ஆசை. ஆனால் இப்போது சொந்த ஊரில் இருப்பதால் வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு வர முடியுமா என தெரியவில்லை.

1 comment:

Raja said...

Congrats suthan. Good job. Keep on going....