Monday, January 31, 2011

போராட்டங்களும் அதன் பாதிப்புகளும்

நான் திருச்செந்தூர் அருகில் இருக்கும் ஒரு கல்லூரியில் வேலை செய்கிறேன். கல்லூரி என்றவுடனே நம் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது, பசுமையான நினைவுகள் தான். அதே போல் மாணவர்களுக்கு சிறிது சுதந்திரம் இருக்க கூடிய கல்லூரிகளில், படித்தவர்களுக்கு அவர்கள் செய்த போராட்டங்களும் நினைவுக்கு வரும். ஆனால் இந்த பதிவு அந்த போராட்டங்களை பற்றியது இல்லை. மாறாக, சமுகத்தில் நடக்கும் ஒரு போராட்டம் எந்த அளவிற்கு மாணவர்களின் அன்றாட நடவடிக்கைகளை பாதிக்கிறது என்பதை பற்றியதே இந்த பதிவு.

சமீபத்தில், எதோ ஒரு பிரச்சினையினால் திருசெந்தூரில் இரண்டு நாட்கள் மதிய நேரங்களில் சிறிது பதற்றம் நிலவியது. அந்த சமயங்களில் எங்கள் கல்லூரிக்குள் நிலவிய பதற்றம் மிகவும் அதிகம். ஒவ்வொருவரும் வேறுமாதிரியான பதற்றங்களில் இருந்தார்கள். அருகிலே இருந்து வரும் ஆசிரியர்கள், தங்கள் குழந்தைகளின் பள்ளிகள் அனைத்தும் விடப்பட்டன என அறிந்தவுடன் குழந்தைகளை பற்றி கவலைப்பட ஆரம்பித்து விட்டனர். அதே போல் எங்கள் கல்லூரி பேருந்துகளின் ஒருங்கிணைப்பாளர் பேருந்துகளின் பத்திரம் பற்றியும், பேருந்துகளை எந்த வழியில் அனுப்புவது, திருச்செந்தூரில் இருந்து வரும் மாணவர்களை எப்படி கொண்டு சேர்ப்பது என்பது பற்றியும் வருத்தப்பட ஆரம்பித்து விட்டார்.

இதே போல் இன்னும் பல விதமான வருத்தங்கள் இருந்தாலும், குறிப்பாக நான் அதிகமான வருத்தத்தினை, வருத்தம் என்பதை விட பயம் என்று குறிப்பிடலாம், நான் கண்டது கல்லூரி பேருந்துகளை பயன்படுத்தாமல் தனியார் மாற்றும் அரசு பேருந்துகளில் வரும் மாணவர்களின் கண்களில் தான். சிறு பிரச்சினை என்றாலே நமது அரசு பேருந்துகள் நின்று போகும், தனியார் பேருந்துகள் சில ஓடினாலும் ஏற முடியாத அளவு கூட்டம் இருக்கும். ஆனால் அன்று நாங்கள் கேள்விப்பட்டது, எந்த பேருந்துகளும் ஓடவில்லை என்பது தான். நினைத்து பாருங்கள். அந்த மாணவர்களில் பலர் இரண்டு மூன்று பேருந்துகள் மாறி செல்ல வேண்டியது உண்டு. இவர்களால் செல்ல முடியாது என்பதை போல் பெற்றோருக்கு தகவல் சொன்னால் அவர்களும் வந்து அழைத்து செல்ல முடியாது. தனி வாகனங்கள் வைத்திருக்கும் பெற்றோர் மட்டுமே வந்து அழைத்து செல்ல முடியும்.

இந்த பிரச்சினை இருந்ததால் சில மாணவர்கள் பேருந்து ஓடவில்லை என்றதுமே கவலையில் ஆழ்ந்து விட்டனர். அவர்கள் பாடத்தினை கவனிப்பது நின்று போனது. இரண்டாம் நாளிலும் இதே போல் செய்தி வர கல்லூரி இடையில் விடப்பட போவதாக தகவல் வந்தது. அந்த நொடியே ஒரு மாணவி தனது புத்தகத்தினை மூடி பையை கிளம்ப தயார் செய்து விட்டார். அப்படியானால் இது வரை நான் நடத்திய எதையுமே அந்த மாணவியால் கவனித்து இருக்க முடியாது.

இதே போல் அனைவருக்கும் ஒரு சம்பவம் நடந்து இருக்கலாம். நியாமான போரட்டங்கள் செய்ய வேண்டி இருந்தாலும் கூட இவ்வாறு முன்னறிவிப்பில்லாமல் நடக்கும் போராட்டங்கள் பலருக்கு பாதிப்பை உண்டு பண்ணுகின்றன. ஆனால் இதனை எவருமே உணர்ந்ததாக தெரியவில்லை. நமது சனநாயகத்தின் பரிசுகளில் இதுவும் ஒன்று.

2 comments:

Philosophy Prabhakaran said...

ஒரு வாரமா பதிவையே காணோம்... புத்தாண்டு உறுதிமொழி என்ன ஆச்சு சார்...?

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
நான் ஸ்ரீ வில்லிபுத்தூர். சிவகாசியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி உள்ளது. அந்த கல்லூரிக்கு என்று பேருந்து கிடையாது. கல்லூரி முடியும் நேரங்களில் அந்த மாணவ மாணவிகள் படும் பாடு சொல்லி மாளாது. எந்த பேருந்துமே நிற்பதில்லை. கல்லூரி நிர்வாகம் அதற்காக எந்த முயற்சியும் எடுப்பது மாதிரி தெரியவில்லை. பேருந்து நபர்களை கேட்டால் மாணவர்கள் புட் போர்டில் தொங்கிக் கொண்டு வருவார்கள் என குறை சொல்கிறார்கள். யாராவது நல்ல ஏற்பாடு செய்தால் நல்லது.
நன்றி.