Friday, January 6, 2012

கண்களாகும் கைகள்: லுயி பிரெயில்- II

இன்று லுயி பிரெயில்ன் இறந்த நாள். கண்களற்ற மனிதர்கள் படிக்கவும் எழுதவும் ஒரு வழியை உருவாக்கி தந்த அவர், தனது 45வது வயதில் இறந்தார். இந்த பதிவில் அவர் உருவாக்கி தந்த பிரெயில் எழுத்துமுறை பற்றி சிறிது பாப்போம்.

பிரெயில் எழுத்துமுறையின் தோற்றம் பற்றி எனது முதல் பதிவில் குறிப்பிட்டு இருந்தேன். லுயி பிரெயில் நைட் ரைட்டிங் எனும் முறையில் சில மாற்றங்களை உருவாக்கி அதனை   எளிதாக  மாற்றினார்.   லுயி பிரெயில் பிரெஞ்சு  எழுது  முறையில் உள்ள  ஒவ்வொரு  எழுத்துக்கும்  ஒரு குறியீட்டினை  உருவாக்க முயற்சி  செய்தார். முதலில்  அவர் எடுத்துக்கொண்டது  ஆறு  புள்ளிகள். இந்த குறியீடுகள் 1245  ஆகிய புள்ளிகளை மட்டுமே பயன் படுத்தின. ஆறு புள்ளிகளும் மேலிருந்து கீழாக, 1 முதல் 6 வரை குறிக்க பட்டன.அதில்  அவர் a-j  வரை  உள்ள  எழுத்துக்களுக்கு  தனி  தனி குறியீட்டினை அளித்தார். அவை எண்களுக்கும் பயன்படுத்த பட்டது. ஒரு குறியீடு எழுத்தை குறிக்கிறதா அல்லது எண்களை  குறிக்கிறதா என்று குறிப்பிடுவதற்கு ஒரு தனி குறியீட்டினை பயன் படுத்தினார்.  அடுத்த பத்து எழுத்துகளுக்கு அவர் மேலிருந்த அதே குறியீடுகளை 3வது இடத்தில மட்டும் ஒரு புள்ளி வைத்து பயன் படுத்தினார். அடுத்து உள்ள எழுத்துகளுக்கு 6ம் இடத்தில் புள்ளி சேர்க்கபட்டது. 
லுயி பிரெயில் உருவாக்கிய முறையில் தனி குறியீடுகளுக்கும் இடம் இருந்தது. ஆனால் பின் நாட்களில் சுருக்கெழுத்து முறையும் உருவாக்கபட்டு பயன்படுத்தபடுகிறது. அதே போல் எழுத்துகளுக்கு என்று இல்லாமல் இசை கோர்வைகளுக்கு என்று தனி முறை உருவாக்க பட்டுள்ளது. பல நாடுகள் தங்களது ரூபாய் நோட்டுகளில் பார்வையற்றவர்கள்  பயன்படுத்துமாறு இந்த முறையினை உபயோகிக்கிறார்கள். கனடாவில் அதிகமானோர் பிரெயில் முறையை உபயோகிக்கவில்லை என தெரிந்து வேறு முறை பயன்படுத்தபடுகிறது. இந்தியாவில் நமது நாட்டின் சட்ட திருத்தங்கள் சில பிரெயில் முறையில் வெளியிடப்பட்டுள்ளன.

Wednesday, January 4, 2012

கண்களாகும் கைகள்: லுயி பிரெயில் - I

எங்களுக்கு தேவை உங்களின் பரிதாபமோ அல்லது நாங்கள் தாக்குதலுக்கு உள்ளாக கூடியவர்கள்  எனும் நினைவூட்டுதலோ அல்ல. நாங்கள் சமமானவர்களாக நடத்தப்பட வேண்டும் - கருத்து பரிமாற்ற திறன் மட்டுமே எங்களுக்கு அதனை பெற்று தரும். 
                                                                                          - லுயி பிரெயில்

மேற்கண்ட வாசகங்கள் பார்வை அற்றவர்களுக்கான எழுத்து முறையை அறிமுகபடுத்திய லுயி பிரெயில் என்பவரின் வார்த்தைகள். அவரின் எண்ணங்கள் இன்று ஓரளவுக்கு நிறைவேறி உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இன்று லுயி பிரெயில்ன் பிறந்த நாள்.
லுயி பிரெயில் சிறு வயதில் அதிகமானோரை போலவே சரியான கண் பார்வை உடன் தான் வளர்ந்தார். அவருடைய மூன்றாவது வயதில் ஒரு நாள் தான் தந்தையின் தொழிற்கூடத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது அவர் கண்களில் ஒரு கூறிய கருவியினால் காயம் ஏற்பட்டது. உடனே எடுத்து சென்று மருத்தவரிடம் காண்பித்த போதும், கண் மருத்துவரிடம் காண்பிக்கப்பட்ட போதும் கூட காயம் குணமாகவில்லை. மேலும் அந்த காயம் பயங்கரமான வலி ஏற்படுத்தியதுடன் அடுத்த கண்ணின் பார்வையையும் பறிக்க ஆரம்பித்தது.

லுயி பிரெயில் அப்படியும் துவண்டு விட வில்லை.தன் தந்தை ஏற்படுத்தி தந்த உன்றுகோலுடன்  பல இடங்களுக்கும் சென்று வந்துள்ளார். அந்த சமயத்தில் அவருக்கு தெரிந்த ஒருவர் கல்வி கற்குமாறு உற்சாகபடுத்தியுள்ளார். அதன் பயனாக வலேண்டின் ஹுஅய் என்பவர் ஏற்படுத்திய பார்வையற்ற குழந்தைகளுக்கான தேசிய நிறுவனம் எனும் பள்ளியில் சேர்ந்தார். அங்கு வலேண்டின் ஹுஅய் ஏற்படுத்திய புது விதமான முறையில் கல்வி கற்பிக்க பட்டது. இந்த முறையில் லத்தின் எழுத்துக்கள் கைகளால் தொட்டு பார்த்து உணரும் அளவில் அச்சு செய்யப்பட்டன. இந்த முறையில் சில சிக்கல்கள் இருந்தாலும் கூட அந்த கால கட்டத்தில் வேறு எந்த ஒரு வழியும் இல்லாததால் இந்த முறையே பின்பற்றப்பட்டது. லுயி பிரெயில் அங்கேயே கல்வி கற்று அதே பள்ளியில் ஆசிரியராக வேலையும் செய்ய ஆரம்பித்தார்.

லுயி பிரெயில்

இந்த சமயத்தில் தான் சார்லஸ் பார்பியர் லுயி பிரெயில்ஐ வந்து சந்தித்தார். அவர் முக்கியமாக வந்தது தான் உருவாக்கிய ஒரு எழுத்து முறையை பற்றி பேசுவதற்காக. சார்லஸ் பார்பியர் ராணுவ வீரர்கள் பேசாமலும், ஒளியின் துணை இல்லாமலும் படித்து அறியும் முறை ஒன்றை உருவாக்கி இருந்தார். அதில் அவர் 12 புள்ளிகளையும் சில கோடுகளையும் பயன் படுத்தி இருந்தார். அனால் அந்த முறை மிகவும் கடினமானதாக இருக்கிறது என்று இராணுவத்தினரால் நிராகரிக்க பட்டது. அந்த முறையை எல்லோரும் நைட் ரைட்டிங் என்று அழைத்தனர். லுயி பிரெயில் அந்த முறையில் இருந்த சில கடினமான சங்கதிகளை நீக்கி  பிரெயில் முறையை அறிமுகப்படுத்தினார்.

பிரெயில் முறையில் ஆங்கில எழுத்துரு
பிரெயில் முறையில் லுயி பிரெயில்ன் பெயர்












 அடுத்த பதிவில் பிரெயில் எழுத்து முறையை பற்றி பாப்போம்.

Tuesday, January 3, 2012

ஆயிரம் ஜென்மங்கள் எடுக்க தயார் ......

உன் மடியில்
படுத்துறங்க மட்டுமே
ஆயிரம் ஜென்மங்கள்
எடுக்கத் தயார்.

நீ செல்லமாய்
காது திருக மட்டுமே
ஆயிரம் ஜென்மங்கள்
எடுக்கத் தயார்.

தவறுகளுக்கு உன்னிடம்
அடிவாங்க மட்டுமே
ஆயிரம் ஜென்மங்கள்
எடுக்கத் தயார்.

உன்னை செல்லம்
கொஞ்ச மட்டுமே
ஆயிரம் ஜென்மங்கள்
எடுக்கத் தயார்.

உன் கையால்
சாப்பிட மட்டுமே
ஆயிரம் ஜென்மங்கள்
எடுக்கத் தயார்.

உன்னை ஆசையாய்
காதலிக்க மட்டுமே
ஆயிரம் ஜென்மங்கள்
எடுக்கத் தயார்.

அம்மா....
நீ எனக்கு தாயாக
கிடைப்பாயானால் மட்டுமே
ஆயிரம் ஜென்மங்கள்
எடுக்கத் தயார்.





Monday, January 2, 2012

புது வருட உறுதிமொழிகள்

சென்ற வருட உறுதிமொழிகளை அப்படியே திரும்பவும் எடுக்க உள்ளேன், மற்றும் சில எண்ணங்களுடன். சென்ற வருடம் எனது உறுதிமொழிகள் நான்கு. முதலாவது அதிகமாக இடுகைகள் எழுதுவது பற்றியது. 2010 ல் இருந்ததை விட இப்போது சிறிய முன்னேற்றம். 2008 இடுகைக்கு பிறகு 2011ல்  தான் எனது இரண்டாவது பதிவு இருந்தது. ஆனால் 2011 ல் பத்து பதிவுகள் எழுதியுள்ளேன். மாசத்துக்கு ஒன்று கூட எழுதவில்லை என்றாலும் ஒப்பீட்டு அளவில் முன்னேற்றம் என்று தான் கொள்ளவேண்டும். முழு வெற்றி இல்லை என்பதால் அப்படியே தொடர்கிறது இந்த வருடத்திற்கும்.


இரண்டாவது உறுதிமொழி டயரி எழுதுவது பற்றியது. அதில் எந்த முன்னேற்றமும் இல்லை அப்படியே தொடர்கிறது. மூன்றாவது உறுதிமொழி கேலி கூத்தாகிவிட்டது. ஒரு அடி கூட நகரவில்லை. கதைகள் எழுத வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் ஒரு வெள்ளை காகிதத்தில் 'அ' கூட போடவில்லை. ஆகவே இந்த வருடமும் இரண்டு உறுதிமொழிகளும் தொடர்கின்றன.

நான்கவதாக எடுத்து கொண்ட உறுதிமொழி வளரும் தொழில்நுட்பங்கள் பற்றி தெரிந்து கொள்வது.இதில் கட்டாயம் வெற்றி பெற்றேன் என்றே சொல்ல வேண்டும்.மெகா கணினியம் பற்றி தெரிந்து கொண்டேன். மேலும் பல தொகுப்பு வலை தளங்களை பின்பற்றி சிறிதளவு முன்னேற்றம் அடைந்தேன். அகவே இந்த உறுதிமொழி வெற்றி பெற்றதாகவே கொள்ள வேண்டும். அதனால் இந்த உறுதிமொழி முன்னேற்றம் அடைகிறது. நீண்ட நாட்களாக நான் படித்து தெரிந்து கொள்பவற்றை மாணவர்களுக்கு சென்று சேர்க்கும் வகையில் ஒரு மின் பத்திரிக்கை தொடங்க வேண்டும் என்பது எனது எண்ணம். ஆனால் அது இழுத்து கொண்டே போகிறது. அகவே அதனை தொடங்கி வெற்றி பெற செய்ய வேண்டும் என்பது புது உறுதிமொழி.

அதை போல் இந்த வருடத்தில் ஆராய்ச்சி படிப்பில் என்னை பதிவு செய்து கொள்ள வேண்டும். அதற்க்கு தேவையான முன்னேற்பாடுகளை தொடங்கி சோம்பல் இல்லாமல் செய்ய வேண்டும் என்பது அடுத்த உறுதிமொழி. பாப்போம் ஒரு வருடம் கழித்து.